Uncategorized
தெருநாய்களை பராமரிப்பதற்காக அரசு வேலையை உதறி விட்டு, திருமணமே செய்யாமல் வாழ்ந்து வரும் இளைஞர்…!!
இன்றைய கால கட்டங்களில் தங்களது பெற்றோரையே, வயதான காலத்தில் பராமரிக்க மனமில்லாத மனிதர்கள் மத்தியில் தெரு நாய்களை குழந்தைகளை போல் பராமரித்து வருகிறார் மதுரையைச் சேர்ந்த மாரிக்குமார்.
மதுரை மகாத்மா காந்தி நகரைச் சேர்ந்த கே.பி.மாரிக்குமார். எம்ஏ ஆங்கிலம் படித்துள்ள இவர், முன்பு எல்ஐசியில் பணிபுரிந்தார்.
சிறு வயது முதலே மாரிக்குமாருக்கு செல்லப்பிராணிகள் வளர்ப்பதில் ஆர்வம் அதிகம்.
அந்த நேசம் ஒரு கட்டத்தில் தெரு நாய்கள் மீது திரும்பி உள்ளது.
அதன்பின் சாலைகளில் செல்லும் போது வாகனங்களில் அடிபட்டு கிடக்கும் நாய்களையும் நோய்வாய்ப்பட்டு உயிருக்குப் போராடும் தெருநாய்களை மீட்டு வீட்டில் வைத்து பராமரிக்க தொடங்கி உள்ளார்.
தெரு நாய்கள் மீதான அவரது நேசத்தை அக்கம் பக்கத்தினர் தொந்தரவாகப் பார்த்தனர். திருமணம் செய்தால் தனது குடும்பத்தினரும் நாய்களை தொந்தரவாக நினைத்தால் என்ன செய்வது எனக் கருதிய அவர் 49 வயதாகியும் திருமணம் செய்து கொள்ளவில்லை.
ஒரு கட்டத்தில் தெருநாய்கள் பராமரிப்புக்கு வேலையையும் தொந்தரவாகக் கருதிய அவர் 10 ஆண்டுகளுக்கு முன்பு, தான் பணிபுரிந்த எல்ஐசி வேலையையும் உதறிவிட்டார்.
குரூப்-1 தேர்வில் வெற்றி பெற்றபோதிலும் அந்தப் பணியிலும் அவர் சேரவில்லை. இதுவரை 250-க்கும் மேற்பட்ட தெருநாய்களை மீட்டு அவற்றுக்கு மறுவாழ்வு அளித்துள்ளார்.
தற்போது 20-க்கும் மேற்பட்ட தெரு நாய்களை வீட்டிலேயே வளர்க்கிறார்.
விருப்பப்பட்டு கேட்போருக்கு இலவசமாகவும் நாய்களை அவர் வழங்குகிறார்.
ஆனால், பெண் நாய்களையும், நோய்வாய்ப்பட்ட நாய்களையும் யாரும் கேட்காததால் அவரே வீட்டில் வைத்து உணவளித்து பராமரிக்கிறார்.
இதுபற்றி மாரிக்குமார் கூறியதாவது: நான் சாலையில் செல்லும்போது தெரு நாய் என்னை நிமிர்ந்து பார்த்தாலே, அவற்றின் தேவையை என்னால் புரிந்து கொள்ள முடியும்.
கடந்த மாதம் ஒரு நாயின் உயிரைக் காப்பாற்ற மட்டும் ரூ.20 ஆயிரம் வரை செலவழித்தேன். நாய்களுக்கு மருத்துவ சிகிச்சை அளித்த வகையில் மட்டும் வீட்டின் அருகேயுள்ள மருத்துவருக்கு ரூ.22 ஆயிரம் பாக்கி வைத்துள்ளேன்.
பகுதி நேரமாக வீட்டில், அரசு போட்டித் தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கு பயிற்சி வகுப்புகள் எடுக்கிறேன். என்னிடம் படித்த 450 பேர், பல்வேறு அரசு துறைகளில் பணிபுரிகின்றனர்.
இவர்கள் அளிக்கும் உதவியாலும், எனது சொற்ப வருமானத்திலுமே தெருநாய்களை பராமரித்து வருகிறேன்.
வெளிநாட்டு நாய்களை பல ஆயிரம் ரூபாய் கொடுத்து வாங்கும் மக்கள், தெருநாய்களை தொந்தரவாக நினைக்கிறார்கள். நாய்களின் மொழியே குரைத்தல்தான்.
மற்ற காரணங்களை ஒப்பிடும்போது, நாய்க்கடியால் இறப்பவர்கள் வெறும் 0.5 சதவீதத்துக்கும் குறைவுதான். தெரு நாய்கள் இருப்பதால் குற்றச் செயல்கள் குறைகின்றன.
தெரு நாய்கள் அதிகம் உள்ள தெருக்களுக்கு திருடர்கள் வர பயப்படுவர். காவல்துறைக்கும் நாய்கள் துப்பறியப் பயன்படுகிறது.
தெரு நாய்களுக்கும் அந்த நுண்ணறிவு உண்டு. அதனால் அந்தந்த பகுதியில் உள்ள நலச் சங்கங்கள், அங்குள்ள மக்களைக் கொண்டு தெருநாய்களை பராமரித்தாலே நாய்களுக்கும், மனிதர்களுக்குமான மோதல் குறையும். குற்றச் செயல்களும் நடக்காது. இவ்வாறு அவர் கூறினார்.
