Tamil News
“என் பொண்டாட்டி கிட்ட ஏண்டா பேசுற” – கோபத்தில் இளைஞரை அடித்தே கொலை செய்த கணவன்..!!
தென்காசி மாவட்டம் புளியங்குடியில் மனைவியிடம் பேசியதால் வாலிபரை அடித்துக் கொலை செய்த கொத்தனாரை போலீசார் கைது செய்தனர்.
தென்காசி மாவட்டம் புளியங்குடி காலாடி தெருவைச் சேர்ந்தவர் தங்கராஜ்.
இவருடைய மகன் கணேசன் (வயது 23).
இவர் கொத்தனார் வேலை பார்த்து வருகிறார்.
இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர்.
அதே பகுதியைச் சேர்ந்தவர் மாரியப்பன் மகன் பாலகிருஷ்ணன் (29). கூலி தொழிலாளியான இவருக்கு திருமணமாகவில்லை.
இவர் கணேசனின் மனைவியிடம் அடிக்கடி பேசி வந்ததாக கூறப்படுகிறது. இதனை கணேசன் கண்டித்தார்.
ஆனால், பாலகிருஷ்ணன் இதனை சட்டை செய்யவில்லை.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவில் அப்பகுதியில் நின்று கொண்டிருந்த பாலகிருஷ்ணனுக்கும், கணேசனுக்கும் இடையே இதுதொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டது.
அப்போது ஆத்திரமடைந்த கணேசன் பாலகிருஷ்ணனை கீழே தள்ளிவிட்டு, அவரை அடித்து உதைத்ததாக கூறப்படுகிறது.
இதில் பலத்த காயமடைந்த பாலகிருஷ்ணன் மயங்கி விழுந்து உயிருக்கு போராடினார்.
இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதியினர், இதுகுறித்து புளியங்குடி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
உடனே, போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜாராம் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.
படுகாயமடைந்த பாலகிருஷ்ணனை மீட்டு சிகிச்சைக்காக புளியங்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே பாலகிருஷ்ணன் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து புளியங்குடி போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து கணேசனை கைது செய்தனர்.
தனது மனைவியிடம் பேசிய வாலிபரை கொத்தனார் அடித்துக்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
